×

2 இராஜாக்கள் : 10

  • 1 : ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரலேன் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
  • 2 : அதில்: உங்கள் ஆண்டவனுடைய குமாரர்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், அரணான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு உண்டே.
  • 3 : இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது.
  • 4 : அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
  • 5 : ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.
  • 6 : அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரரின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.
  • 7 : இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
  • 8 : அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்துவையுங்கள் என்றான்.
  • 9 : மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும், இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?
  • 10 : ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.
  • 11 : யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்.
  • 12 : பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,
  • 13 : யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.
  • 14 : அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டு பேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
  • 15 : அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
  • 16 : நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
  • 17 : அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தான்.
  • 18 : பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
  • 19 : இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.
  • 20 : பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.
  • 21 : யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது.
  • 22 : அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான்.
  • 23 : பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.
  • 24 : அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்தபின்பு, யெகூ வெளியிலே எண்பது பேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
  • 25 : சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சோர்ந்த ஸ்தலம் எங்கும் போய்,
  • 26 : பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
  • 27 : பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல மலஜலாதி இடமாக்கினார்கள்.
  • 28 : இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.
  • 29 : ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரோபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
  • 30 : கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
  • 31 : ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
  • 32 : அந்நாட்கள்முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,
  • 33 : யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனோசேயர், இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான்.
  • 34 : யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  • 35 : யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
  • 36 : யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.